கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் முத்தமிழ் மன்றம் தொடக்க விழா

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான முத்தமிழ் மன்றம் தொடக்க விழா தமிழ்த்துறை சார்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உறுப்பினர் அருண் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ,விருதுநகர் மாவட்டம் என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் தமிழ் மொழியின் சிறப்புகளையும், உலக பொதுமறையாம் திருக்குறளின் பெருமைகளையும் எடுத்துக் கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தி முத்தமிழ் மன்றத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.
என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் மதுஸ்ரீ, யாசினி மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அனுஷா மூவரும் திருக்குறளின் 1330 குறளையும் மனப்பாடமாக முதலில் இருந்து கடைசி வரையும் கடைசியிலிருந்து முதல் திருக்குறள் வரையும் அதிகாரத் தலைப்புடன் மனப்பாடமாகச் சொன்னார்கள்.

கல்லூரி மாணவர்கள் கேட்ட திருக்குறள் சார்ந்த வினாக்களுக்கும், திருக்குறள் எண்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினால் அதிகாரத் தலைப்புகளுடன் சரியான திருக்குறளை எந்தத் தடையுமின்றி மாணவிகள் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமிழ்த் துறை பேராசிரியர் கிறிஸ்டி விமலா, முத்தமிழ் மன்ற தலைவர் அர்ச்சனா, செயலாளர் செல்வ சக்தி மற்றும் பொருளாளர் கனக பிரியா ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்ச்செம்மல் இராசு நன்றி கூறினார்.







