தூத்துக்குடியில் தலைமை மதபோதகர் கொலை வழக்கு: சபை ஊழியர் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் ரோட்டை சேர்ந்தவர் கனகராஜ் (73). இவர் தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, சபையின் ஊழியரான குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதை கனகராஜ் கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, டைட்டஸ் மற்றும் உதவி போதகர் ஜான் தாமஸ் (57) ஆகியோர் கனகராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.
இதன்படி, கடந்த 4.10.2016 அன்று டைட்டசின் சகோதரர் அண்டோ (39) மற்றும் நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த ரகு (45) ஆகியோரை தூத்துக்குடிக்கு வரவழைத்துள்ளனர்.
அன்று இரவு சபை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தலைமை மத போதகர் கனகராஜின் முகத்தில் தலையணையால் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.
பின்னர் உடலைக் குளிப்பாட்டி, வேறு உடை அணிவித்து தடயங்களை மறைக்க முயன்றனர்.
இச்சம்பவம் குறித்து கனகராஜின் உறவினர் சுதர்சனம் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் உதவி போதகர் ஜான் தாமஸ் இறந்துவிட்டார்.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டைட்டஸ், அண்டோ மற்றும் ரகு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். மேலும், டைட்டசுக்கு 13,500 ரூபாயும், அண்டோவுக்கு 6,000 ரூபாயும், ரகுவுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.







