கோவில்பட்டியில் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தாத அதிகாரிகளை கண்டித்து, காதுகளில் பூ வைத்து த. மா.கா.நூதன போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக சாலையை சீரமைக்கப்படாததை கண்டித்தும், சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தாத அதிகாரிகளை கண்டித்தும் தமாகாவினர் காதுகளில் பூக்களை வைத்துக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் விக்னேஷ் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் வைரம், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துசாமி, திருமுருகன், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யாதுரை, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய்சாமி, வட்டாரத் தலைவர் கனிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், செந்தூர் பாண்டியன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியர் ஹிமான்ஷூவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசு அலுவலக வளாகம் சாலை புதுரோட்டில் முடிவடைகிறது. கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வேலை நாட்களில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அரசு அலுவலக வளாக சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து, சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அப்போதைய கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மனு வழங்கப்பட்டது.

அப்போது 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 ஆணடுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து. 2 ஆண்டுகள் ஜமாபந்தியிலும் மனுக்கள் வழங்கினோம். அதற்கும் பதில் இல்லை. பின்னர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கோவில்பட்டி வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும், அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட போராட்டங்களையும் நடத்திவிட்டோம். ஆனால், எதற்கு அரசு அதிகாரிகள் அசைந்து கொடுக்கவில்லை. இந்த சாலையை சீரமைக்காமல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகளை அடையாளம் காட்டும் விதமாக கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அல்வா வழங்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தோம். உடனடியாக சமாதான கூட்டம் நடத்திய கோட்டாட்சியர், 3 மாதங்களுக்குள் அரசு அலுவலக வளாகச் சாலை சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது, சட்டமன்றம் முன்பு அதிகாரிகளை கண்டித்து அல்வா வழங்கும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







