மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு; கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும்.

வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று. அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது என்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக அது இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்தாவது நிறைவேற வேண்டும்.
மத்திய அரசுடன் தவெக அரசு எப்போதும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது. கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும் அதை விரைவில் புரிந்துகொள்வார்கள்.
நிறைய பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் கூட ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச்சூழலில், இதுகுறித்து முதலமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்படும்போது, கடந்த ஆட்சியைக் காரணமாகக் கூறுவதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதிலாக, தற்போது நடைபெற்று வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு, ஏதாவது தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, யார் மீது இந்தக் குற்றங்களையும் பழிகளையும் சுமத்தலாம் என்று கூறி, பொறுப்பிலிருந்து விலகுவதற்கான காரணங்களைத் தேடக் கூடாது.

ஏனெனில், இது சாதாரணமான விஷயம் இல்லை. குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள், எல்லோர் மனதிலும் மிகப்பெரிய அளவு ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மனதில பயத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு மோசமாக, அதிகமாக இருக்கக்கூடிய சூழல்ல, இதற்கு ஒரு முடிவு காண்பதற்கு தான் ஒரு அரசாங்கம் வழிவகை காண வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.







