தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்
அசாம் மாநிலத்தில் ரைபிள்ஸ் ராணுவப் பிரிவில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுடலைமணி, பணியில் இருந்தபோது வீர மரணமடைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தட்டி (எ) மூக்காண்டி என்பவரின் மகன் சுடலைமணி (31). இவர் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்து, அம் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மனைவியும், செந்தட்டி (6) என்ற மகனும், ரேணுகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, வீரர் சுடலைமணி வீர மரணமடைந்தார். இவரின் மறைவுச் செய்தி மேலக்கூட்டுடன்காடு மற்றும் தளவாய்புரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீர மரணமடைந்த சுடலைமணியின் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உடல் ஊருக்கு வந்தடைந்ததும் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது







