கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முக்கிய குறைபாடுகள் ; துரை வைகோ எம்.பி. அறிக்கை
மதிமுக எம்.பி,. துரை வைகோ.வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் அழைப்பின் பேரில், இன்று (25.6.2026) காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம், மக்களின் நலன் கருதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று முக்கிய இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டேன்.
முதலாவதாக கோவில்பட்டியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனையை விரிவாகப் பார்வையிட்டேன். 413 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் 50 படுக்கைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் 25,000 சதுர அடியில் ஐந்து மாடி புதிய வளாகம் அமையவுள்ளதால், விரைவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கோவில்பட்டி மாவட்ட மருத்துவமனை தன்னிறைவு பெற உள்ளது.ஆனால் அங்கு பல முக்கிய குறைபாடுகள் உள்ளதை இன்றைய ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்ந்தேன்.
அவை, மருத்துவமனைக்குள் உள்ள உள் சாலைகள் பல வருடங்களாகப் பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்துள்ளன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பே கோரிக்கை வைத்தும், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. மருத்துவப் பயனாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். Stretcher படுக்கை வண்டியில் அழைத்துச்செல்லப்படும் மருத்துவ பயனாளர்கள் பெரிதும் வலியை உணர்கின்றனர்.
* இதயவியல் (Cardiology), சிறுநீரகவியல் (Nephrology), நரம்பியல் (Neurology) துறை மருத்துவர்கள் நிரந்தரமாக இல்லை. தற்போது நரம்பியல் மருத்துவர் மாற்றப்படும் நிலையில் உள்ளார்.
* மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் வாதநோய், விபத்தில் உறுப்புகள் செயலிழப்பு, தன்னிலை குன்றியவர்கள் (Autism) ஆகியோருக்கான பேச்சு சிகிச்சையாளர் (Speech Therapist), occupational Therapist ஆகியோர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டிலேயே அதிக Dialysis எனப்படும் சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் ஒன்றான இங்கு 8 கருவிகள் மட்டுமே உள்ளன. அதில் 7 பொதுவாகவும், ஒன்று தொற்றுள்ளவருக்காகவும் பயன்பாட்டில் உள்ளது. எனினும் கூடுதல் டயாலிசிஸ் கருவிகள் தேவை.
* 2022-ல் எனது கோரிக்கையின் பேரில் ஒதுக்கப்பட்ட MRI மெஷின் இன்னும் நிறுவப்படவில்லை.
* மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த ஆய்வில் மேற்கண்ட நிலைகளை, தேவைகளை தெரிந்துகொண்டேன்.
இரண்டாவதாக கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்.21-ல் அமைந்துள்ள அரசு அலுவலக வளாகத்தில் துணை ஆட்சியர் அலுவலகம், BSNL, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் வருகை தருகின்றனர். ஆனால் வளாகத்திற்குள் உள்ள சாலைகள் 10 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதை தெரிந்துகொண்டேன்.

மூன்றாவதாக கோவில்பட்டியைச் சுற்றிய 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை மிகவும் குறுகலாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்பின்றியும் உள்ளது. இந்த சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தரமான சாலை வசதி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நியாயமான கோரிக்கையை பெற்றுக்கொண்டேன்.
இந்த மூன்று ஆய்வுகளின்போதும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் உடன் இருந்தார்.
ஆய்வுகளில் பெறப்பட்ட கோரிக்கைகளையும் தனித்தனியாகத் தொகுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகிய இரு அமைச்சர்களையும் சந்தித்து விரைவில் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்க உள்ளேன்.
கோவில்பட்டி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் . ஆர்.எஸ் ரமேஷ்க்கு உறுதுணையாக இணைந்து தொடர்ந்து செயல்படுவேன்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.







