கோவில்பட்டியில் துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தபதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோன்று கோவில்பட்டி கணேஷ் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ஜான்கோ ராணி. இவர் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், அவரது வீட்டு பணிப்பெண் ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் வீட்டிலிருந்த 41 இன்ச் டிவி திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
ஒரே நாளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது,. போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,







