எட்டயபுரம் அருகே கழுத்தை அறுத்து பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்ராஜ் (32), டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 30.4.2015 அன்று அருண்ராஜ், வீரமுத்து அம்மாள் (65) என்ற பெண்ணின் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அப்போது கிரிக்கெட் பந்து வீரமுத்து அம்மாள் வீட்டிற்குள் விழுந்ததால், அதை எடுக்கச் சென்ற அருண்ராஜை அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண்ராஜ், வீரமுத்து அம்மாளைசாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார்.இதன் தொடர்ச்சியாக, மறுநாள் வீரமுத்து அம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அருண்ராஜ் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று அவரைப் பயமுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஊர்ப் பெரியவர்களிடம் புகார் அளித்ததால், அவர்கள் அருண்ராஜைக் கண்டித்தனர். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள தோட்டம் அருகே வீரமுத்து அம்மாளும் அவரது உறவினர் காளியம்மாளும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் மறைந்திருந்த அருண்ராஜ், வீரமுத்து அம்மாளை வழிமறித்துக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் அருண்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்ராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று அதிரடி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பூங்குமார் ஆஜர் ஆனார்.







