கோவில்பட்டி சமூக நீதி விடுதிக்கு கூடுதல் கட்டிடம் ; கருணாநிதி எம்.எல். ஏ.உறுதி
Oplus_16908288

கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் அருகே சமூக நீதி மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தில் 105 மாணவிகளும், 2-வது தளத்தில் 55 மாணவிகளும் தங்கி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விடுதியில் தங்கி பயிலுவதற்காக கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி வருடந்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இடப்பற்றாக்குறை காரணமாக விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் விடுதியில் தங்கிப்படிக்க இடம் அளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி சமூக நீதி மாணவிகள் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விடுதி காப்பாளர்கள் ராஜேஸ்வரி மற்றும் சிவனம்மாளிடம் விடுதியில் எத்தனை மாணவிகள் தங்கிப் படிக்கிறார்கள், புதிதாக விடுதியில் தங்கிப் படிப்பதற்காக எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையின்படி மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் அதிகளவில் விண்ணப்பங்கள் வருவதால் விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து மாணவிகளையும் விடுதியில் சேர்க்க முடியாத நிலை இருப்பதாக காப்பாளர்கள் தெரிவித்தனர்.
உடனே, விடுதியின் சுற்றுப்புறத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடம் இருக்கிறதா என சட்டமன்ற உறுப்பினர்., கேட்டறிந்தார். அதற்கு, விடுதிக்கு பின்பகுதியில் இடம் இருக்கிறது, ஆனால் அது அரசாங்க இடமா, தனியார் இடமா போன்ற விவரங்கள் தெரியவில்லை என காப்பாளர்கள் தெரிவித்தனர்.

உடனே, சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதி அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, விடுதிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விடுதிக்கு பின்புறம் உள்ள இடத்தைப் பற்றி விசாரித்தார். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, சமூக நீதி மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதி காப்பாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
அதே நேரத்தில், முடிந்த அளவு, விடுதியில் தங்கிப் படிப்பதற்காக விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து மாணவிகளையும் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு விடுதி காப்பாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்தார். மேலும், விடுதி மாணவிகளிடம் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.







