மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட ரூ.3 கோடி கசகசா பறிமுதல்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாகத் திட்டமிட்டு கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, மலேசியாவிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 40 அடி நீளமுள்ள சரக்குப் பெட்டகம் (Container) ஒன்று வந்திறங்கியது. இந்தச் சரக்குப் பெட்டகத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்தச் சரக்குப் பெட்டகத்திற்கான இறக்குமதி ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அதில் மலேசியாவிலிருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அதிகாரிகள் சரக்குப் பெட்டகத்தைத் திறந்து உள்ளே இருந்த பொருட்களை முழுமையாகச் சோதனையிட்டனர். அப்போது, பாலித்தீன் மூலப்பொருட்களுக்கு இடையே ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் எடையுள்ள கசகசா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆவணங்களை போலியாகத் தயாரித்துக் கடத்தி வரப்பட்ட அந்த 5 டன் கசகசா மூட்டைகளையும் அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். சர்வதேசக் கறுப்புச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கசகசா இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத கடத்தலை ஈரோட்டு முகவரிக்கு இறக்குமதி செய்த போலி நிறுவனம் எது, இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேசக் கடத்தல் நபர்கள் யார் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







