பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தொடர் போராட்டம்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு

கோவில்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மூத்த விவசாயி ரங்கசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர்கள் பிரேம்குமார், சொரிமுத்து, வென்னிமலை , சரவணன், ஆதிமூலம், சீனிவாசன், ரெங்குதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் நேதாஜி, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இக்கூட்டத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இக்கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 22 ஆம் தேதி முதல் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .

கோவில்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலும் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.







