கோவில்பட்டியில் பரிதாபம்: மினி பஸ் மோதி புது மாப்பிள்ளை பலி
கோவில்பட்டி ஜோதி நகர் 1-வது தெருவை சேர்ந்த புதியவன் என்பவரின் மகன் காளிராஜ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் மகளிர் குழு கடன் தொகை வசூலிக்கும் வேலை செய்து வந்தார்.
இன்று மதிய நேரத்தில் இவர் மோட்டார் சைக்கிளில் புது ரோடு இறக்கத்திலிருந்து மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வழக்கமாக இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சாலையை விதிகளை மீறி வாகன ஓட்டிகள் கடப்பார்கள். இதனாலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த காளிராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அவர் இடதுபுறம் ஓரமாக வந்த போது பின்புறமாக வந்த தனியார் மினி பஸ் திடீரென மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதி தள்ளியது. இதனால் தூக்கி வீசப்பட்ட காளிராஜ் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேற்கு போலீசார் காளிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மினி பஸ் டிரைவர் கைது கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான காளிராஜிக்கு திருமணம் ஆகி 7 மாதம் தான் ஆகிறது







