திமுக அரசின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்; நிலக்கோட்டை பிரசாரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி,. நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழி எம்.பி.; பேசியதாவது:-
இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது அந்த கூட்டணியிலிருந்து விலகினார்.

அப்போது நான் பண்ணியது மிகப் பெரிய தப்பு. இனிமேல் பாஜகவோடுட எனக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை என்று மிகப் பெரிய பிரகடனமாகச் சொன்னார். சொல்லி, இப்போது மறுபடியும் பாஜகவோடு, மோடியோடு கூட்டணி வைத்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் 100 நாள் வேலைத் திட்டம், மகாத்மா காந்தி ஊர்க் வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றை, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு நூறு நாளுக்கு வேலை கிடைக்கச் செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. அதை இன்னைக்கு பிஜேபி ஒழிக்கக்கூடிய வகையில் மாற்றி, மகாத்மா காந்தி பேரையும் எடுத்திட்டு, விபி ஜி ராம் ஜி என்று மாற்றி விட்டனர்.
எந்த மகாத்மா காந்தி தன்னுடைய இறுதி மூச்சிருக்கும் வரை எந்த ராம் என்ற பேரை உச்சரித்துக்கொண்டிருந்தாரோ? அவருடைய பேரை எடுத்துட்டு எந்த ராம் கொண்டு வந்தாங்கன்னு தெரியவில்லை? மகாத்மா காந்தி வழிபட்ட அந்த ராம் பெயர், இல்லைன்னா மகாத்மா காந்தியை கொன்ற ராம் என்ற பேரான்னு தெரியவில்லை. திட்டத்தின் பெயரை மாற்றினாலும், இப்ப நூறு நாள் வேலை யாருக்கும் நூறு நாள் வேலை கிடையாது. இங்க இருக்கக்கூடிய சகோதரிகள், சகோதரர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் தமிழ்நாடு இருக்கு சுற்றுலாப் பயணிகள் போல வந்து செல்கின்றனர், தமிழ்நாடு வளர்ச்சிக்கு என்று எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இதுவரை வாய் திறக்கவில்லை.
சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு எந்த முன்னேற்பாடும் ஒன்றிய அரசு செய்யவில்லை; பல நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள் மூடப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே இருக்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர், மகளிர் விடியல் பயணம் மூலம் சராசரியாக ஒரு பெண்மணி 800 முதல் 1000 ரூபாய் வரை சேமிக்கிறார், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, முதல்வர் மருந்தகம், காலை உணவு திட்டம் இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

நமது தேர்தல் அறிக்கையில், கலைஞர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது, மகளிருக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படுகிறது, அதை வைத்து அவர்கள் வீட்டு உபயோகத்துக்கு தேவையான எந்த பொருள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
கலைஞர் கொடுத்த தொலைக்காட்சி இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது, அவர்கள் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை
இவ்வாறு கனிமொழி எம்.பி.பேசினார்.







