தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணி தகவல்கள்
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த தேமதிக வுக்கு ஓர்பு ராஜ்யசபை சீட் மாறும் 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு போராடிய நிலையில் திமுக மேலிடம் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்குகளையே பெற்ற தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஏன்?என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன,

தமிழக வடமாவட்டங்களில் வன்னியர்களின் செல்வாக்கு அதிகம். தற்போது, பா.ம.க. டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி தரப்பு என இரண்டாக உடைந்துவிட்டதால், அக்கட்சிக்கான வன்னியர் வாக்கு சிதறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு வன்னியர் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் வெளியேறியது, தி.மு.க.வுக்கு வடமாவட்டங்களில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த காலங்களில் தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு இருந்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பெரும்பாலான தொகுதிகள் வன்னியர்கள் நிறைந்த வடமாவட்டங்கள் ஆகும்.
எனவே, அந்த வாக்குகள் இப்போதும் தே.மு.தி.க.வுக்கு அப்படியே கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், விஜய்காந்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்று தி.மு.க. தலைமை நம்புகிறது.
அதேபோல், விஜயகாந்த் மனைவி பிரேமலதா நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அச்சமுதாய வாக்குகள் கிடைக்கும் என்றும் தி.மு.க. தலைமை நினைக்கிறது.

இப்படி, ஒரே கட்சி மூலம் 2 சமுதாய வாக்குகளை பெற முடியும் என்று தி.மு.க. தலைமை நினைத்ததாலேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகளை அள்ளிக்கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், எங்களை விட வாக்கு சதவீதத்தில் குறைவாக உள்ள தே.மு.தி.க.வுக்கு இவ்வளவு தொகுதிகளா என்று தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மனக்குமுறலில் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.







