ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Oplus_16908288
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அய்யநேரி, அப்பநேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார் நத்தம், வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகள்பிரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன.

இந்த ஊராட்சிகளில் இயங்கி வரும் ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்துடன் இணைத்து ஆணை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வ.உ.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் மணிமொழி நங்கை தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கோவில்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் புனித அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர் மகேந்திரன், வட்டார செயலாளர் கருப்பசாமி, வட்டார பொருளாளர் குணசீலன் ராஜா, குருவிகுளம் வட்டார செயலாளர் மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.








