மாணவி கொலை வழக்கு: குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, வேடநத்தம் கிராமத்தில் வீடு வீடாகவும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய 5 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவி கொலை வழக்கில், 9 நாட்களுக்குப் பிறகு குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த விசாரணை வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
மாணவியின் உடல் மீட்கப்பட்ட பகுதிக்கு வந்து சென்ற ஒரு மர்ம பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விளாத்திகுளம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மர்ம நபர் ஒருவர் பைக்கில் செல்வது பதிவாகியிருந்தது.

விசாரணையில் அந்த பைக் பார்த்திபனூரைச் சேர்ந்த ஒருவருடையது என்பதும், அது திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அந்த பைக்கை திருடி வந்த நபர் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக மாணவியின் நகங்கள் அமைந்தன. உயிருக்காகப் போராடிய மாணவியின் நகக்கண்களில் குற்றவாளியின் சிறிய சதை துகள்கள் சிக்கியிருந்தன.
முதலில் அந்த சதை துகள்களைக் கொண்டு DNA சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனின் DNA-வும், மாணவியின் நகத்தில் இருந்த சதையின் DNA-வும் கச்சிதமாகப் பொருந்தியதை அடுத்து, அவர் தான் கொலையாளி என்பது ஆதாரத்துடன் உறுதியானது.
2020-ல் கோவில்பட்டி அருகே கீழ ஈரால் பகுதியில் 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஏற்கனவே சிறை சென்றவர். மூதாட்டி கொலை வழக்கில் இவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவர், தற்போது மீண்டும் ஒரு மாணவியைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்ம முனீஸ்வரனைத் தனிப்படை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.







