விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உள்பட 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமார், அழகர் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீசார் பிடிக்கச் சென்றனர்.
அப்போது, அவர் தப்பிச்செல்ல முயன்றதால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 8-ஆம் தேதி அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்யக் கோரி ஆகாஷின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி மானாமதுரை டிஎஸ்பி ராஜா, தனிப்பிரிவு எஸ்.ஐ. முத்துராஜா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் டிஎஸ்பி உள்ளிட்டோரை வழக்கில் சேர்ப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.







