• March 17, 2026

கோவில்பட்டியில் கோவில் முன்பு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா கோரிக்கை

 கோவில்பட்டியில் கோவில் முன்பு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.பி. ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த ஜனவரி 25ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

மார்ச் 15ஆம் தேதி மண்டல பூஜைகள் நிறைவடைந்தன. இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  இக்கோவிலுக்கு கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புனிதத் தன்மை வாய்ந்த கோவில் முன்பு இரண்டு இளம் பெண்கள் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். 

கோவில் முன்பு இது போன்ற டான்ஸ் ஆடுவது மிகவும் கேவலமான ஒரு விஷயம். இதற்கு அறநிலையத்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அந்த ரீல்சை இன்ஸ்டாகிராம் பதிவிலிருந்து நீக்க வேண்டும். இதனைப் பதிவிட்ட அந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது கோவில் முன்பு செண்டை மேளம் வாசிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி செண்டை மேளம் வாசிப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இது கோவிலுக்கு வரும் பக்தர்களை அமைதியாக சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்து வருகிறது. இதனை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் கண்டும் காணாதது போல் உள்ளது.

எனவே கோவில் முன்பு பாரம்பரிய இசை வாத்தியங்கள் வாசிப்பதை மட்டும் அனுமதிக்க வேண்டும். செண்டை மேளம் வாசிப்பது மற்றும் பட்டாசு வெடிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவிலின் புனித தன்மையும் மாண்பையும் பாதுகாக்க வலியுறுத்தியும் மார்ச் 23ஆம் தேதி திங்கள்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோயில் பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை திரட்டி மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

 இவ்வாறு என். பி. ராஜகோபால் கூறியுள்ளார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *