`சாகித்ய அகாடமி’ விருது பெறும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கோவில்பட்டி கல்லூரியில் படித்தவர்
பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகள் இயங்கி வருகிறது. சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுநேற்று (மார்ச் 16) 24 மொழிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதியிடம் இருந்து இந்த விருதை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பெறுவார்.
வாழ்க்கை குறிப்பு

1954ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரசுவதி தம்பதியருக்கு மகனாக தமிழ்ச்செல்வன் பிறந்தார். எழுத்தாளர் கோணங்கி, நாடகவியலாளர் ச. முருகபூபதி. ஆகியோர் இவரது சகோதரர்களாவர்.விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை பயின்றார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றினார்.
இவர் சிறுகதைகள், கட்டுரைகள், சிறு நூல்கள், சிறார் இலக்கியம் என பல்வேறு படைப்புகளை உருவாக்கி உள்ளார்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். இவரது `வெயிலோடு போய்’ சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்றாகும். அரசியல் எனக்குப் பிடிக்கும் என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது
கோவில்பட்டியிலிருந்து வெளியான நீலக்குயில் என்ற பத்திரிக்கையில் இவரது முதல் கவிதை “ஒருநாள் டைரி” 1972 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர் பின்னர் சிறுகதை எழுதத் தொடங்கினார்.
1978 ஆம் ஆண்டில் முதல் சிறுகதையான திரைச்சுவர்கள் தாமரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கதைகள் எழுதினார். முதல் கதைத் தொகுப்பு வெயிலோடு போய் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அசோகவனம், வெயிலோடு போய் சிறுகதைகள், பூ என்ற திரைப்படத்தின் மூலக்கருவாகின. இத்திரைப்படத்திற்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியர் விருதை இவருக்கு வழங்கியது.
படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவங்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார்

. சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தனது மண் மனைவியுடன் (ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் )இரா.வெள்ளத்தாயுடன் சிவகாசியில் வசித்து வருகிறார்
விருதுகள் .
- தமிழக அரசின் சிறந்த திரைக்கதையாளர் விருது (பூ-2008)
- ஆனந்த விகடன் சினிமா விருது
- ஜெயகாந்தன் விருது
- மக்கள் தொலைக்காட்சி விருது
- 2025 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது







