அதிமுக வில் இணைந்தார் காளியம்மாள்

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள், சென்னையில் இன்று (மார்ச் 13)காலை, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாகையைச் சேர்ந்த காளியம்மாள், தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் பணியாற்றினார்..

தமது அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலம் அடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60 ஆயிரம் வாக்குகள் பெற்றார். அந்த தேர்தலின்போது அவரின் பேச்சுக்கள், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கடந்த பிப்ரவரி மாதம், நாம் தமிழர் கட்சியிலிருந்து, காளியம்மாள் விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என்று அறிவித்தார்.
அதன்பிறகு எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில், காளியம்மாள் இணைந்தார்.
இணைப்பிற்கு பிறகு காளியம்மாள் கூறியதாவது:-
ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று, நான் இன்று அதிமுகவில் இணைந்து உள்ளேன்.
இவ்வாறு காளியம்மாள் கூறினார்.







