3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கட்டிட தொழிலாளிக்கு தூக்கு தண்டனை
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (வயது 41). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை ஆனந்த் சேகர் மிரட்டி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் அந்தச் சிறுமிகளைக் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்தச் சிறுமிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதைக் கவனித்த பெற்றோர், அவர்களிடம் விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமிகள் அழுதுகொண்டே தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆனந்த் சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கினார். ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை (தூக்குத் தண்டனை) விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனையுடன் சேர்த்து, பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பிற்காக வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.







