எரிவாயு தட்டுப்பாடு: மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம்; கனிமொழி எம்பி நேரில் வழங்கினார்
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய எரிவாயு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி க்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி எம்பி நேரில் வழங்கினார்.
கடிதத்தில் கூறி இருந்ததாவது:- எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை கடந்த ஆறு மாத சராசரி அடிப்படையில் 65% ஆகக் குறைக்கும் முடிவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும். எனவே, குளிர்காலத்தை தவிர்த்து கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த எரிவாயு நுகர்வில் 65% என்ற அளவை நிர்ணயிப்பது என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். கோடைகால உச்சகட்டத் தேவையின் போது போதிய மின் உற்பத்தியை உறுதி செய்ய இது உதவும்.
எரிவாயு விநியோகக் குறைப்பு காரணமாக ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோர், எரிவாயு பயன்பாட்டிலிருந்து மின்சாரப் பயன்பாட்டிற்கு மாறும் வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் உச்சகட்ட மின்சாரத் தேவையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, கோடைகால மின் விநியோக தேவையை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்க பாண்டியன், செல்வகணபதி ஆகியோர் சென்று இருந்தனர்.







