• March 9, 2026

கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை

 கோவில்பட்டி அருகே விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள தோணுகால் கிராமம், மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிலோமீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட ஓர் விமான ஓடுதளம் அமைந்துள்ளது.

இந்த ஓடுதளம், கோவைச் சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் தங்களது செஸ்னா வகை சிறிய ரக விமானத்தை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், சிலர் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி வந்தனர்.

63 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 1998ஆம் ஆண்டு வரை செயல்பட்டது, பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு கோவில்பட்டியில் விரைவில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

  இதனையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் 50 தனித்திறன் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதில், விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் உருவாக்கும் திட்டமும் ஒன்றாகும்.

தோணுகால் பகுதியில் ஏற்கனவே உள்ள ஓடுதள நிலம் தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில், தமிழக அரசு சார்ப்பில் டெண்டர்விடப்பட்டது.

அப்போது புதிய நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமின்றி, விமான பயிற்சி மையம் அமைக்கச் சாத்தியம் உள்ளது.மட்டுமல்லாமல், சுமார் 35 ஏக்கர் நிலம் இதற்குத் தேவையான அளவில் கிடைத்துள்ளதாகவும், அருகிலேயே தூத்துக்குடி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இருப்பதால் இது பயிற்சிக்குப் பொருத்தமான இடமாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் திட்ட இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, தோணுகால் ஓடுதளத்தினை நேரில் ஆய்வு செய்தது.

ஓடுதளம் 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும், அடிப்படை பழுது பார்வை மற்றும் சீரமைப்பின் மூலம் அதை மீண்டும் செயல்படுத்தலாம் என்பது கண்டறியப்பட்டது.இத்துடன், 10க்கும் மேற்பட்ட பயிற்சி விமானங்களை இங்கு இயக்கக்கூடிய சூழல் உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த முன்னேற்பாடுகளின் அடிப்படையில், விரைவில் இந்த விமான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டும், இரண்டு முறை டெண்டர்கள் விடப்பட்டும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென ஓடுபாதையை சரிய செய்து விமான பயிற்சி மையம்  அமைப்பதற்கான பூமி பூஜை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்றனர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை,

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்(டிட்கோ)ஆதரவுடன், புதிய விமான பயிற்சி மையம் (Flying Training Organisation) அமைய இருக்கிறது,

விமான பயிற்சி மையத்தை RFT Aviation Academy மற்றும் Charlie Foxtrot Aviation ஆகிய தனியார் நிறுவனங்கள் இணைந்து அமைக்கவுள்ளன விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1,500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனர். ஆனால், சுமார் 600 பேர் தான் இந்தியாவில் பயிற்சி முடித்து பணிக்கு வருகின்றனர். மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான்.

எனவே இப்பகுதியில் விமான பயிற்சி மையம் அமையப்பெற்றால் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து விமான பயிற்சி பெற மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதனால் இப்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இந்த விமான பயிற்சி மையத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *