கோவில்பட்டியில் பரிதாபம்: ஓடும் ரெயிலில் ஏறும்போது பயணி கீழே விழுந்து உயிரிழப்பு
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரகுமான் (வயது 52). கோவில்பட்டி வந்திருந்த இவர் இன்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்துள்ளார்.
காலை 10 மணியளவில், குருவாயூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ‘குருவாயூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் 2-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது.
அப்போது, நடைமேடையின் எதிர்புறமாக இறங்கி தண்டவாளத்தை கடந்து ரெயிலில் ஏற முயன்ற ரகுமான், எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.

இந்த விபத்தில் ரெயில் சக்கரம் நசுக்கி அவரது வலது கால் துண்டானதுடன், இடுப்புக்கு கீழ் பலத்த காயமடைந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை, நடைமேடை பணியில் இருந்த போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் செல்வி மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி ரெயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.







