இடைக்கால பட்ஜெட்: சட்டசபையில் “காதுகுத்தும் விழா” என அழைப்பிதழ் வெளியிட்டு அ.தி.மு.க. விமர்சனம்
தமிழக சட்டசபையில் இன்று பிப்ரவரி 17 அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் தமிழக அரசு மக்களுக்கு காது குத்துவதாக அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் கூறியிருப்பதாவது:-
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்.
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபை கூடத்துக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் இந்த அழைப்பிதழை கையில் தூக்கி பிடித்தபடி வந்தனர்,.







