கோர்ட்டில் டி.ஆர்.பாலுவிடம் 3 மணி நேரம் அண்ணாமலை குறுக்கு விசாரணை; 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்டார்
திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார்.
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். அதன் விவரம் வருமாறு:-

அண்ணாமலை: கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு 10 கப்பல்களை சொந்தமாக விலைக்கு வாங்கினார் என மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கருத்து தெரிவித்தார். அது ஞாபகம் உள்ளதா?
டி.ஆர்.பாலு: எனக்கு தெரியாது.
அண்ணாமலை: இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. (இவ்வாறு கூறி, அந்த பத்திரிகை செய்திகளை தாக்கல் செய்தார்.)
டி.ஆர்.பாலு: செய்தி வேறு விதமாக உள்ளது. ஆனால் அதை உள்நோக்கத்துடன் அண்ணாமலை வேறு விதமாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் பேசியது அவதூறுதான்.
அண்ணாமலை: சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சுய லாபம் அடைவதற்காகவும் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது 10 மீன்பிடி கப்பல்களை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கியுள்ளதாக மு.க.அழகிரி அதே பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.

டி.ஆர்.பாலு: மு.க.அழகிரி மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை.
அண்ணாமலை: அழகிரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தீர்களா?
டி.ஆர்.பாலு: நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக சொல்வதில் உண்மையில்லை, உள் நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை. 10 கப்பல்கள் இல்லை. 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது. அழகிரி விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ளார். அதற்காக அவதூறு வழக்கு தொடர தேவையில்லை. அண்ணாமலையும் அரைவேக்காட்டு தனமாக அதை ஆதாரமாக கொடுக்கிறார்.
அண்ணாமலை: மத்திய அமைச்சராக இருந்த போது 10 கப்பல்கள் வாங்கினீர்களா?
டி.ஆர்.பாலு: இல்லை. 2 கப்பல்கள்தான் வாங்கினேன்.
இந்த கேள்விகளை தொடர்ந்து டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை மேலும் கேள்விகளை கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார்.

வழக்கு விசாரணை தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது;-
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று நேரடியாக நான் சம்பந்தப்பட்ட வழக்கில் கடந்த 3 மணிநேரமாக குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு அவர் வராததால் அடுத்த ஒரு தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் குறைந்தபட்சமான வழக்கில் மட்டும்தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை எடுத்து நேரடியாக வாதிடுவார்கள். எனக்கு திமுக செய்திருக்கக்கூடிய ஊழல், நாங்கள் வெளியிட்டிருக்கும் திமுக பார்ட் 1, பார்ட் 2. டி.ஆர்.பாலு மீது நான் சுமத்தியிருக்கும் குற்றம். அனைத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் காரணத்தால் நானே நேரடியாக ஆஜராகி வாதிட்டேன்.
டி.ஆர்.பாலுவுக்கு, 2.15 மணிக்கு விமானம் இருந்ததால், 3 மணி நேரத்திற்கு பிறகு இன்று குறுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.பாரதியின் வழக்கு மார்ச் 10 அன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து இந்த வழக்கை நானே வாதாட இருக்கிறேன். அடுத்து வரக்கூடிய குறுக்கு விசாரணையின் போது இன்னும் நிறைய கேள்விகளை கேட்க இருக்கிறேன். டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை டி.ஆர்.பாலு மீது மற்றும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்போகிறோம். அந்த வழக்கின் போது நான் அரசியல் வந்த பிறகு வாங்கிய சொத்துக்கள் எதாவது இருந்தால் அது அனைத்தும் பொதுப்படையில் இருக்கும். கடன் வாங்கி இருக்கிறோமா அதுவும் பொதுப்படையில் இருக்கும். டி.ஆர்.பாலு மீது நான் தொடர உள்ள புது வழக்கு என்பது பொதுவெளியில் தமிழக மக்களுக்கு எல்லாத்தையும் சொல்வதற்காக பயன்படுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.







