15 ஆம் தேதி மகா சிவராத்திரி: கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜை
மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானுக்கு உரிய இரவு என்று பொருள். சிவனுக்கு உரிய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ பக்தர்களின் விரதங்களுள் மிகவும் முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும்.
இந்த நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதுவும் இரவு முழுவதும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இப்படிப்பட்ட மகா சிவராத்திரி நாளில் தான் சிவபெருமான் பாற்கடலை கடையும் போது வெளிவந்த மிகவும் கொடிய ஆலகால விஷத்தை உண்டு மயங்கி விழுந்தார். அப்போது இரவு முழுவதும் சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் தான் இந்த மகா சிவராத்திரி.

சிவன் மயங்கி விழுந்த அந்த பிரளய காலத்தில் உலகம் அழியாமல் இருக்க பார்வதி தேவி சிவனுக்கு நான்கு காலத்திலும் பூஜைகளை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி (நாளை )வருகிறது. இந்நாளில் இரவு முழுவதும் சிவன் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடக்கும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் கிடைக்கும். அதோடு வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தடைகளும் நீங்கி, மகிழ்ச்சியும், செழிப்பும் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.
கோவில்பட்டியில் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி விழா 15 ம் தேதி இரவு 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், கும்பபூஜை, ஸ்ரீ ருத்ர ஜபம் பாராயணம், மூலமந்திர ஹோமம் நடத்தப்படுகிறது.
இரவு 8.15 மணிக்கு
பூர்ணாகுதி நடைபெறும்.
அதை தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

முதல் கால பூஜை இரவு 8.45 மணிமுதல் இரவு 10.15 வரை நடக்கிறது. பால் பொங்கல் செய்யப்படுகிறது.
தொடர்ந்து இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 12.15 வரை இரண்டாம் கால பூஜை நடக்கிறது. பாயாச அன்னம் நிவேதனம் செய்யப்படுகிறது.
இரவு 12.45 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மூன்றாம் கால பூஜை நடக்கிறது. எள்ளு சாதம் நிவேதனம் செய்யப்படும்.
அதிகாலை 2.25 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நான்காம் கால பூஜை நடக்கிறது. சுத்தான்னம் நிவேதனம் செய்யப்படும்.
பின்னர் 4.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்து நடைசாத்தப்படும்.
நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை – 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை -5.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடைபெறும்.
ஒவ்வொரு கால அபிஷேகத்திற்கும் அபிஷேக பொருட்கள் பால், தயிர் இளநீர், தேன், விபூதி, புஷ்பம், பழங்கள்
வாங்கி கொடுத்து சுவாமி அம்பாள் அருள்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடணுறை பூவணநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடக்கிறது.







