திருப்பரங்குன்றம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார்.
தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். வழக்கம்போல் செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் வழிமறித்து , தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர்.

இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரின் டீக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தததாக கூறப்படுகிறது.
இதனை செந்தில்குமார் கண்டித்து இங்கு மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளார். இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் போதை கும்பல் செந்தில்குமாரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலைக் கும்பலைதேடி வருகிறார்கள்.







