திருச்சி மாநாட்டில், 21ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கிய இயக்குனரும் நடிகருமான சீமான் ,2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற இக்கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.

கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது
திருச்சியில் இம்மாதம் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026” நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.

வழக்கமாக, நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், வரும் தேர்தலிலும் 117 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட இருக்கின்றன. இந்த முறை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் மட்டும் சீமான் போட்டியிட்டு வருகிறார். முதல் தேர்தலில்(2016) கடலூர் தொகுதியிலும், 2-வது தேர்தலில் (2021) திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திருவொற்றியூர் தொகுதியில் 3-வது இடம்பிடித்த அவர், 24.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்த முறை சீமான் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.







