மின்கட்டணம் தொடர்பான தகராறில் வாலிபர் கொடூர கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை வாசன் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் இசக்கி ராஜா (40).
இவர்கள் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். 2 பேர் வீட்டுக்கும் ஒரே மின் இணைப்பு என்பதால்2 பேரும் மின் கட்டணத்தை பகிர்ந்து கட்டுவார்களாம்.

இந்த நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்காக ஏழுமலை வாசன், இசக்கி ராஜாவிடம் பணம் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நேற்று இரவு ஏழுமலை வாசன் இசக்கி ராஜா வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று இசக்கிராஜா மின் இணைப்பை எப்படி துண்டிக்கலாம் என்று கேட்டு ஏழுமலை வாசனிடம் தகராறு செய்தார்
அப்போது ஆத்திரமடைந்த இசக்கி ராஜா, ஏழுமலை வாசனை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கி ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







