சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை ; நெல்லை போக்சோ கோர்ட்டு நீதிபதி அதிரடி தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வசிக்கும் ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை 2024-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், குற்றவாளியின் டிஎன்ஏவும், கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் தடயவியல் ஆய்வில் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நேற்று அளித்த தீர்ப்பில், “குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரினர்.
சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த கோர்ட்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.







