தூத்துக்குடியில் 2,000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா: 9ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
தூத்துக்குடியில் தமிழன்டா இயக்கம் சார்பில் நாட்டுப்புற கலைத் திருவிழா ஜனவரி 9-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழரின் கலைகள், மருத்துவம், உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவற்றை பறைசாற்றும் வகையிலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு சார்பில் 2,000 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா காமராஜ் கல்லூரியில் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

முதல் நாள் மாரத்தான், பொங்கல் விழா, இளவட்டக்கல் தூக்குதல், அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்தல் பம்பரம், கோலி, கில்லி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து 1,000 பனை விதைகள் நடவு செய்யப்படுகின்றன.
2-ம் நாள் காலை அந்தோணியார் புரம் பகுதியில் பனை மரத்தில் ஏறும் போட்டியும், பனை சார்ந்த கண்காட்சியும் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு காமராஜ் கல்லூரி வளாகத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி, மாநில அளவில் சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

மூன்றாவது நாள் நிகழ்வில் காலை 7 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 3 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. மாலையில் தமிழன்டா விருது வழங்கும் நிகழ்வு, பரிசளிப்பு போன்றவை நடைபெறுகிறது.
மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், வர்மம், ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதா மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச கண் சிகிச்சை முகாமுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பாரம்பரிய பொருட்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







