செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; வீரபாண்டியன் வலியுறுத்தல்
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு உரிய நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்., செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்றால் அது நிதியுடன் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தமிழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடாது.

கேரளாவில் நாங்கள் தோற்றுவிட்டது போல் பிம்பம் கட்டமைக்கின்றனர். கேரளாவில். நாங்கள் 49 சதவீதம்வாக்குகள் பெற்றோம். காங்கிரஸ் 51 சதவீதம் பெற்றுள்ளனர். இந்த தோல்வியை நாங்கள் பரிசீலனை செய்து, வரும் சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெறுவோம்.
கேரளாவில் கம்யூனிஸத்துக்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவை பீகார் வெற்றியுடன் ஒப்பிட்டு, பீகார் தேர்தல் போல் தமிழக தேர்தல் அமையும் என உள்துறை அமைச்சர் பேசுவது நகைப்புக்குரியது. திமுக கூட்டணி தான் தமிழ்நாட்டில் வெல்லும்.
திமுக தலைமையிலான கூட்டணி பலம் மட்டும் காரணமல்ல. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் அதற்கு ஒரு காரணம். இந்தியாவிலேயே சமூக நலன் சார்ந்த திட்டங்கள், சேமநலத்திட்டங்களில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. அந்த திட்டங்களும் எங்களுக்கு கைகொடுக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையும் பலம். தமிழ்நாடு மக்கள் எப்போதுமே பிரிவினை கருத்துகளை ஏற்கமாட்டார்கள். அவரவர் ஆலயங்கள், கடவுள், வழிபாடு. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு பதற்ற அரசியலை முன் வைக்கின்றனர். அதற்கு திருப்பரங்குன்றமே சான்று.
இதுபோன்ற பதற்ற அரசியலை, பிளவு அரசியலை தமிழக மண் ஏற்காது. எங்கள் கூட்டணி பலத்தை விட தமிழக மக்களின் ஒற்றுமை பலம் தான் எங்களின் பலம். எனவே, பாஜக எந்த வழியில் வந்தாலும், எத்தகைய சூழ்ச்சி செய்தாலும் அது தோற்கடிக்கப்படும்.
சாதியால், மதங்களால் யார் மக்களை பிளவு படுத்துகின்றனரோ அவர்கள் தான் தீயசக்தி. திமுக ஒரு மக்கள் சக்தி, ஜனநாயக சக்தி. நடிகர் விஜய் அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்களும், பெற வேண்டிய அனுபவங்களும் அதிகம் இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகள் தெளிவுபடுத்துகிறது.
அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

திமுக தலைமையிலான கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. கம்யூனிஸ்ட் அதிகமான இடங்களை கேட்டபதற்குரிய அரசியல் தார்மீக பலம் கொண்ட கட்சி. நாங்கள் கூடுதல் இடங்களை கேட்டாலும் தமிழக முதல்வர் ஜனநாயக விரோதமாக எடுத்துக் கொள்ள மாட்டார். எங்களை உள்ளும், புறமும் அறிந்தவர் தமிழக முதல்வர். எனவே, கூடுதலாக இடங்கள் கேட்கும்போது, சூழல் அறிந்து முதல்வர் பரிசீலிப்பார். எத்தகைய சூழ்நிலையிலும் எங்கள் கூட்டணி தான் வெல்லும்.
இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.







