திருநெல்வேலியில் நவீன அருங்காட்சியகம்; இன்று மாலை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.56.36 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் நவீன அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரை நாகரிகத்தின் அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தி தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை இந்த அருங்காட்சியகம் பறைசாற்றுகிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரிய தொல் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது

இளம் தலைமுறையினர் தமிழ்நாட்டின் பழமையான நாகரிகத்தை நேரடியாக உணரும் வாய்ப்பை இந்த அருங்காட்சியகம் நமக்கு வழங்குகிறது.
இந்த அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்வையிடுகிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் தொடங்கி வைக்கிறார். அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ணார்பேட்டை
முதல் டக்கரம்மாள்புரம் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கட்சிக்கொடிகள் பறக்கின்றன. ழிநெடுகிலும் நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை அரியகுளம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி மலைச்சாலை பகுதிகளில் தி.மு.க. கொடிகள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.







