“திமுக ஒரு தீயசக்தி” – ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் விஜய்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நல்ல காரியத்தை தொடங்கும் முன் மஞ்சள் எடுத்து வைத்தே தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி VIBE தான். நம் கொடியில் கூட மஞ்சள் நிறம் உள்ளது. ஈரோடு விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பது காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய். எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் சூழ்ச்சிகார கூட்டம் ஒன்று தொடர்ந்து அதை செய்து வருகிறது. ஈரோடு மண்ணில் மகத்தான மனிதரை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.
எல்லாத்தையும் விட்டு விட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன். நான் சினிமாவுக்கு வந்த 10 வயதில் இருந்து இந்த மக்களுடனான உறவு தொடங்கியது. எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நானும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டுமே அடித்து விடுகின்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
ஈரோடு கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி.
“பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதனால்தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.
பெருமையாக ‘மாடல் அரசு’ என்கிறார்கள். இவற்றை கேட்டால் விஜய் அரசியலே பேச மறுக்கிறார், விஜய் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், விஜய் பஞ்ச் வசனம் பேசுகிறார். விஜய் பத்து நிமிடம் தான் பேசுகிறார், ஒன்பது நிமிடம் தான் பேசுகிறார் என நம்மிடமே திரும்பி வருகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன?

நான் எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? பேசுவதில் இருக்கும் விஷயம் என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அது அரசியல் இல்லாமல் வேறு எதுதான் அரசியல்? உங்களைப் போலத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, இழிவாகப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும் வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்கிறீர்கள்’ என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.”
அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள். உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை.
காஞ்சிபுரம் நிகழ்ச்சியில் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள், மீண்டும் ஒருமுறை விளக்கமளிக்கிறேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்லி அசிங்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வது எப்படி இலவசமாகும். மக்களுக்கு ஒன்று என்றல் இந்த விஜய் வந்து நிற்பான். விஜய் எப்போதும் மக்கள் பக்கம் தான். மக்கள் மானத்தோடு வாழ வேண்டும் .
திமுக ஆட்சியில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என கேட்டோம், அனைவருக்கும் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அனைவரும் சொந்த வீட்டிலேயேவா இருக்கீங்க, வாடகை வீட்டில் இல்லையா..?. தொடர்ந்து வீட்டில் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும் என்று கேட்டோம். தமிழ்நாட்டில் பல மாணவர்கள் பள்ளியில் இடைநின்றது திமுக ஆட்சியில் தான்.

உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில், தரக்குறைவாக அசிங்க அசிங்கமாக பேசுறதுதான் அரசியல்னா, அது எனக்கு வராது. வராதுன்னா… நல்லாவே வரும். வேண்டாம்னு விட்டு வெச்சிருக்கேன்.
2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். நீங்கள் கேட்பதற்காக எலாம் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது. சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று திமுக அரசு செயல்படுகிறது. திமுகவும் பிரச்சினைகளும் பெவிகால் போட்டி ஒட்டியது போன்றது; பிரிக்கவே முடியாது.
எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருப்பதால் அவர்களை தான் எதிர்ப்போம். எங்களுக்கு தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே கதறுகிறார்கள்.
மாறுவேடத்தில் மரு வைத்துக் கொண்டு வருபவர்கள், மண்டை மீது இருக்கும் கொண்டையை மறைக்க வேண்டும். விஜய்யை, தவெகவை எப்படி முடக்கலாம் என்றே 24 மணிநேரமும் அரசு சிந்தித்து வருகிறது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும்.
அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு மிகப் பெரிய பலம். செங்கோட்டையன் அண்ணன் போல் இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள். தவெகவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு விஜய் பேசினார்..







