கோவில்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் 506 பேருக்கு விலையில்லா மிதிவண்டி; அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 506 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சயில் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வரை பொருத்தவரை கல்வி, மருத்துவம் என 2 கண்கள் என கூறுகிறார். பள்ளி கல்வி என்பது தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி ஆகியோர் காலத்திலேயே குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லப்பட்டது. அது தரமான கல்வியாக இருக்க வேண்டுமென அதிக சிரத்தை எடுத்து வருகிறார்.
அதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்காக பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களுக்கும் அரசு உதவி செய்கிறது.

இந்த நான்கரை ஆண்டுகளில் 326 பேர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். போட்டியான உலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் அவற்றை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென முதல்வர் அனைத்தையும் செய்து வருகிறார்.
மாணவிகள் செல்போன்கள் பயன்படுத்துவதில் வரைமுறை கொண்டு வர வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்கி பார்க்க வேண்டும். அதன் பின்னர் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சுயக்கட்டுப்பாடு என்பது தேவை. சமூக வலைதளங்களில் குறிப்பாக பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதில் பார்ப்பவைகளை நம்ப வேண்டாம். அதுகுறித்து உங்கள் ஆசிரியர்கள், பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

போனில் உங்களது புகைப்படங்கள், எண் ஆகியவற்றை பதிவிட வேண்டாம். மாணவிகள் எதனையும் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகள், தானியங்கள் என சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் சிப்ஸ் ஆகியவற்றை உண்ண கூடாது.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா, ஆசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







