கோவில்பட்டி தொட்டிலோவன்பட்டியில் இருந்து நாலாட்டின்புதூர் வரை சர்வீஸ் சாலையின் இருபுறமும் விளக்குகள் அமைக்க பரிசீலனை
கோவில்பட்டியில் கூடுதல் பஸ் நிலையம் அமைந்துள்ள சர்வீஸ் சாலை
தமிழ்நாடு கம்மா நாயுடு மகா ஜன சங்கத்தின் மாநில துணை செயலாளர் டி.வெங்கடேஷ் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மதுரை – திருநெல்வேலி தேசிய நான்குவழிச்சாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் இருந்து கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் வரை 4 மேம்பாலங்கள் உள்ளன.
தோட்டிலோவன்பட்டியில் இருந்து நாலாட்டின் புதூர் வரை அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணுகுசாலையின் இரு மார்க்கங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்ற.. மற்ற பகுதிகளில் தேசிய நான்குவழிச் சாலை அருகே உள்ள அணுகுசாலையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாலாட்டின்புதூரில் இருந்து தோட்டிலோவன்பட்டி வரையிலான அணுகுசாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் கோவில்பட்டி அருகே தோணுகால் விலக்கில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை போல் இனாம்மணியாச்சியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மற்றும் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
அனுகுசாலைகள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பு பகுதியாகும். ஆகவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு இது வசதியாக இருக்கும். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,.

இந்த கோரிக்கைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மதுரை திட்ட செயலாக்கப் பிரிவு (PIU) திட்ட இயக்குனரிடம் இருந்து டி.வெங்கடேசுக்கு பதில் கடிதம் வந்துள்ளது அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
திண்டுக்கல் – சமயநல்லூர் பிரிவின் திட்டப் பகுதியில் தொட்டிலோவன்பட்டியிலிருந்து நாலாட்டின்புதூர் வரையிலான சேவை சாலையில் இருபுறமும் தெருவிளக்குகளை வழங்குவதற்கான திட்டம் தகுதிவாய்ந்த அதிகாரியால் பரிசீலனையில் உள்ளது.. ஒப்புதல் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.







