ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பட்டதாரி பெண். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
அந்த பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் (37) என்பவர் அறிமுகமானார். அவர் ‘நான் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். ரூ.25 லட்சம் கொடுத்தால் வேலை நிச்சயம்” என்று ஆசைவார்த்தை கூறினார்,.’

இதை நம்பிய பெண்ணின் தந்தை மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரன் வங்கி கணக்குக்கு பல்வேறு தவணையாக ரூ.25 லட்சம் அனுப்பினார். ஆனால் மீண்டும் பணம் தேவைப்படுகிறது என்று பிரபாகரன் கேட்டார். இதையடுத்து பெண்ணின் தந்தை 5 பவுன் நகையும் கொடுத்தார். இவ்வாறு பணம், நகை கொடுத்து ஒரு ஆண்டு கடந்த பின்பும் பிரபாகரன் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்ணின் தந்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலிடம் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த எஸ்பி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை தேடி வந்தனர். இந்தநிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த பிரபாகரனை கைது செய்து ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவர் வேலை வாங்கி தருவதாக பல இளம்பெண்களை வரவழைத்து ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







