போக்குவரத்துக்கு லாயக்கற்ற புதியம்புத்தூர் – தூத்துக்குடி சாலை ; உடனடியாக சீரமைக்க கோரி அதிமுக பாஜக கட்சியினர் சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை போடப்பட்டு சுமார் 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த சாலை குண்டும் குழியுமாக தார் சாலை என தெரியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதியம்புத்தூர் -தூத்துக்குடி சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது

இந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரி அதிமுக மற்றும் பாஜக கட்சி சார்பில் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலை துறை மற்றும் திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதிமுக நகரச் செயலாளர் ஆறுமுகசாமி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ் பாஜக வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் வரும் 4 ந் தேதி டெண்டர் விடப்பட்டு விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்







