தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க நடவடிக்கை; எடப்பாடி பழனிச்சாமியை உப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து கோரிக்கை
தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து பல்வேறு கட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், “மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் பாதுகாக்க அதிமுக துணைநிற்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் பதிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி இருந்தார்.

அதன்படி, இன்று சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், நிர்வாகிகள் மந்தரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், கணேஷ்நகர் சுயம்புநாடார், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உள்ளிட்டோர் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோர், சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை கேட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி, “உப்பள தொழிலின் பிரச்சினைகள் குறித்து மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை நான் கவனித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்” என உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி அதிமுக செயலாளர் சுடலைமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







