பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் தேசிய விவசாயிகள் சங்கம் மனு

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முன்னிட்டு தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ். ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் கருப்பசாமி ஆடு வளர்ப்போர் சங்க தலைவர், ஊடக பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார்,தோணுகால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுந்தரராஜ் நாயக்கர்,ஒன்றிய இளைஞர் தலைவர் கோசல்ராம், இளையரசனேந்தல் கிளை தலைவர் பாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்ட முடிவில் கோட்டாட்சியர் ஹீமான்சு மங்களை போராட்ட குழுவினர் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மிகப் பெரிய நகரமாக மதுரை – திருநெல்வேலி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள நகரம் ஆகும். கோவில்பட்டி நகரில் இருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் போக்குவரத்து தொடர்பு உள்ளது. இரண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில் அமைந்த நகரம் ஆகும்.
கோவில்பட்டி கோட்டத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைதுரை,வெள்ளையத்தேவன்,தனாதிபதி பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்து கோன், வாஞ்சி நாதன் உயிர் விட்ட வாஞ்சி மணியாச்சி, எட்டயபுரம் பாரதி போன்ற எண்ணற்ற விடுதலை வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களை கொண்டுள்ள பகுதியாக விளங்கி வருகிறது. அத்துடன் பொருளாதார மற்றும் தொழில் துறையில் நாளும் பொழுதும் வளரும் நகராக இருந்து வருகிறது.
கடந்த ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் ஆக இருக்கும் போது துணை மாவட்ட தகுதி பெற்று இருந்தது. ஆகவே, விரைந்து கோவில்பட்டியை ஓட்டப்பிடாரத்தின் ஒரு பகுதி, விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, கோவில்பட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவேங்கடம் தாலுகாவின் கிழக்கு பகுதி ஆகிய பகுதிகளை இணைத்து கோவில்பட்டி மாவட்டம் அமைக்கவேண்டும்.

அதே போல், சென்ற ஆண்டு பெய்த கனமழையால் உளுந்து, பாசி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பாதிப்பு அடைந்து விளைச்சல் குறைந்தது. அதனால் 2024-2025 ஆம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவில்பட்டி பயணியர் விடுதியில் மறைந்த அய்யா நாராயணசாமி நாயுடு மறைந்த இடமான கோவில்பட்டியில் அவர் பிறந்து நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் அவர்களுக்கு கோவில்பட்டியில் மணிமண்டபம் கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
தற்போது விதைக்கபட்டுள்ள மக்காச்சோள பயிருக்கு அதிக அளவில் யூரியா தேவைப்படுகிறது. ஆனால் அரசு கூட்டுறவு சங்கங்களில் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் போதிய அளவுக்கு யூரியா இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள். விவசாயிகள் இயற்கை உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா தரமுடியும் இழுத்து அடித்து வருகிறார்கள்.

இயற்கை உரங்கள் தரம் இல்லாதவையாகவும், விலை அதிகமாகவும் இருப்பதால் விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் உள்ளதால் விவசாய பயிர்களுக்கு தளை சத்து கிடைக்காமல் பயிர் வளர்ச்சி பாதிப்பு அடைந்து உள்ளது. இதனால் விளைச்சல் பாதிப்பு அடையும் நிலையில் உள்ளதால் தட்டுப்பாடு இல்லாமல் எவ்வித கட்டுபாடும் இல்லாமல் யூரியா வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







