வங்கியில் சேவைகுறைபாடு: நீதி மன்ற பணியாளருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றத்தில் அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் கார்த்திக்ராஜா என்பவர் விளாத்திகுளத்தில் ஒரு பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஏடிஎம் அட்டையும் பெற்றுள்ளார்.
இந்த ஏடிஎம் அட்டையின் மூலம் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வரவில்லை. ஆனால் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ் செய்தி வந்துள்ளது.
இது குறித்து வங்கியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு வங்கி நிர்வாகம் உங்களது கணக்கில் ஓரிரு நாட்களில் அந்தப் பணம் திரும்ப செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் கார்த்திக்ராஜா ,வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.20,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.30,000 ஐ 6 வாரத்திற்குள் கார்த்திக்ராஜாவுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.







