`போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன்’ -மாணவர்கள் உறுதி எடுக்க வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி அரசு தொழில் நுட்ப ‘போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போதையில்லா தூத்துக்குடி மாவட்டம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்திவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது:-
இந்த காலகட்டத்தில் இளைஞர் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் இளமை பருவத்தில் பாதை மாறிவிடக் கூடாது. மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த வயதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கவனிக்கும் பட்சத்தில் உங்கள் பாதை மிக அழகாக இருக்கும்.
சமூக விரோதிகள் இளைஞர் சமூகத்தை, போதைப் பொருள் விற்றல், போதைப் பொருளுக்கு அடிமையாக வைத்தல் உள்ளிட்ட செயல்களுக்குட்படுத்துகின்றனர். அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பொழுது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படுகிறது.

எனவே, போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது எனவும், அதன் தீமைகள் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். எதிர்கால தலைவர்களாக மாணவர்களாகிய நீங்கள் தான் தமிழ்நாட்டை வழிநடத்த போகிறீர்கள்.
மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்கால தலைவர்கள் மற்றும் எதிர்கால தமிழ் சமுதாயம். யாருடைய கட்டாயத்தின் பேரிலும், நீங்கள் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு உள்ளாக கூடாது.
அவ்வாறு இருக்கின்ற பொழுது, புத்திசாலியான முறையில் நல்ல முடிவுகளை எடுத்தல், நல்ல எதிர்காலம் அமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம்.
போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று மாணவர்களாகிய உங்கள் மனதிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளும் அதை மீறக்கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், யாரேனும் போதைப் பொருள் விற்றாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லா உதவி எண் மூலம் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். உங்கள் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். போதை பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களாகிய உங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்திட முடியும்.
எனவே, போதைப் பொருள் பயன்பாட்டினால் ஆற்றலையும் அறிவையும் வீணாக்காமல், மிக கவனமாக அறிவை பயன்படுத்தி செயல்பட வேண்டும். படிக்கின்ற நேரத்தில் சிறந்த முறையில் படிக்க வேண்டும். நல்ல முறையில் உங்கள் எதிர்காலம் அமைய வேண்டும்
இவ்வாறு அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார்,.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சி.மதன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்தரசு, ப்ராஜக்ட் பியூச்சர் இந்தியா டிரஸ்ட் நிறுவனர் கல்யாணந்தி சச்சிதானந்தம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







