குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 23 ந் தேதி கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி, 22ஆம் தேதி பகல் 11 மணிக்கு காளி பூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுடம், 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறும்.
23ஆம் தேதி அதிகாலையில் கொடிப்பட்ட ஊர்வலத்தையடுத்து, 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னர், காப்பு அணியும் பக்தர்கள் வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்குவர்.

கோவிலில் நாள்தோறும் காலை 7 முதல் இரவு 7.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகன வீதியுலா வருதல், கோவில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
அக்டோபர். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறார். தொடர்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரர் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
அக்டோபர். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தர்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.







