கோவில்பட்டி நகராட்சி முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை அருகில் உள்ள சாலையோர வியாபாரிகளை மிரட்டி காய்கறிகளையும் வாழைப்பழங்களையும் குப்பை அள்ளும் வண்டியில் அள்ளிச் சென்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலரின் லஞ்சம் ஊழல் நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், நிர்வாகி மோகன்,நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், ஐ/என்/டி.யு.சி. ராஜசேகரன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் செல்வம் (எ) செல்லத்துரை, பகத்சிங் ரத்ததான கழக மா. காளிதாஸ், லட்சுமணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஆணையாளரை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம், கட்டிடங்கள் கட்ட, கட்டிட வரைபட அனுமதி கொடுப்பதற்கு என அதிகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
மேலும், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து உள்ளதாகவும் புகார்கள் உள்ளது.2022-2023 தமிழ்நாடு அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் கடடப்பட்டுள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தையில், நகராட்சியின் கட்டட அனுமதியை பெறாமல் புதிதாக 9 கடைகள் கட்ட அனுமதித்து அதில் சில லட்சங்களை கையூட்டாக பெறப்பட்டதும் தெரிய வருகிறது.

இது சம்பந்தமாக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, இவர் மீது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஊழல் மற்றும் வருமானததிற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பதை விசாரிக்கும் விசாரணை அமைப்பு தலையிட்டு விசாரணை நடத்துவதற்கு முன்பாக தங்களின் கீழ் பணியாற்றும் மேற்படி அதிகாரி மீது தாங்கள் உரிய விசாரணை நடத்தி, மேற்படி விசாரணை முடிவுகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.








