• April 3, 2025

குடல் நோய்களும் …காரணங்களும்…

 குடல் நோய்களும் …காரணங்களும்…

.இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்….

செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள்:-உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.

செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள்:-வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.

குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள்:

உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

வாயுத் தொந்தரவு:ஏற்படுவது ஏன்:- சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.

வயிற்று வலி வருவது ஏன்:- வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.

குடல் புண் வருவது எப்படி:-

உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.

குடல் புண்ணால் ஆபத்தா:-

இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க சித்தர்கள் சொன்ன யோசனைகள்:-

மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம்.  உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது:-புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும்.  ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *