100 நாள் வேலைத்திட்ட நிதி ரூ.4034 கோடி வரும் வரை போராடுவோம் ;கோவில்பட்டி ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி.பேச்சு


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கோவில்பட்டி தொகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது:-
100 நாள் வேலை திட்டம் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது கொண்டுவரப்பட்டது. சாமானிய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை கிடைக்க வேண்டும் என்று கொண்டு வந்த திட்டம். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்குப் பணத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்களில் எதற்கு கேட்டாலும் ஒன்றிய அரசு பணம் கொடுப்பதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்விக்கான நிதி ரூ. 2,000 கோடி வழங்கப்படும் என்கின்றனர். ஆனால் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளவர்கள் போல் பாஜகவினர் வேஷமிட்டு வருகின்றனர்.
கல்விக்கும் பணம் வரவில்லை, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு உழைத்த சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் வரவேண்டிய சம்பளப் பணம் தருவதற்கு ஒன்றிய பாஜகவிற்கு மனம் வரவில்லை.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25 பட்ஜெட்டில் ரூ. 86,000 கோடி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கினார். இவ்வளவு குறைவாக ஒதுக்கினால், எப்படி போதும் என்று நாங்கள் கேட்டோம். நிதி தேவை அதிகரித்தல், நாங்கள் அதிகரித்து தரக்கூடிய ஒன்று என்று சொன்னார். அதில், ரூ. 9,754 கோடி அதிகரித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இந்த பணத்தை சேர்த்துத்தான் போடவேண்டும்.
இந்த வருஷம் 2025- 26 பட்ஜெட்டில், அதே ரூ. 86,000 கோடி ஒதுக்கினார். இந்த லட்சணத்தில்தான் ஒன்றிய அரசாங்கம் செயல்படுகிறது. சம்பளம் கொடுக்க வழியில்லை, 5 மாதங்களாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். பலமுறை ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து, எங்களுக்குத் தரவேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்க கூடிய நேரத்தில், இந்த கோரிக்கையை வைக்கிறார். இதற்கு மேல் பொறுத்தது போதும், நாம் களத்தில் இறங்கிப் போராடுவோம், நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதனால், இந்த ரூ. 4000 கோடி வரவில்லை என்றால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் போராடும், நமக்கு வரவேண்டிய நிதி வந்து சேரும் வரை தொடர்ந்து போராடுவோம். நம்முடைய உரிமைக்காக, வர வேண்டிய நியமன நிதிக்காக, உழைப்பு வர வேண்டிய சம்பளத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் உங்களோடு நின்று போராடும்
இவ்வாறு கனிமொழி எம்,பி.பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு , தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலை வகித்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் வீ.முருகேசன், தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா மற்றும் திமுக நிர்வாகிகள், வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.+
