கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் விற்பனையை தடுக்க வேண்டும்’ -கனிமொழி எம். பி. யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மனு


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி யை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று நேரில் சந்தித்தனர்.
கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மா. பரமசிவம், துணைத்தலைவர் கோபால்சாமி, செயலாளர் வி எஸ் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லட்சுமணன், உறுப்பினர் குருசாமி,ஆல் இந்தியா மேட்ச் சேம்பர் சிவகாசி தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் பிலால் மேச் நூர் முகமது, பொருளாளர் நாகராஜன், மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் டேவிட், செயலாளர் தேன்மொழி ராஜன், பவுல்ராஜ், கிருபாகரன் மற்றும் உறுப்பினர்கள் ராஜேந்திர குமார், பகட்டி மகேஷ் மிட்டல், ஜோசப் ரத்தினம், முத்து சின்ன கொம்பையா, பெருமாள்பட்டி மாரியப்பன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது கனிமொழி எம்பி யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தி மற்றும் விற்பனையை பாதிக்கும் சீன லைட்டர்களை தடை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அனைத்து உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து வேண்டிக் கொள்வதற்கு ஆவணை செய்ய வேண்டும்.
அதன்பிறகு மத்திய தொழில் துறை மந்திரியையும் சந்திக்க ஏற்பாடு செய்து இந்தியாவில் கள்ளச் சந்தையில் சீன சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மெழுகு தீப்பெட்டி தொழிலுக்கு சி. பி. சி. எல்.மூலமாகவும், பெரிய தயாரிப்பாளர்களுக்கு நேரடியாகவும் சிறிய உற்பத்தியாளர்களுக்கு சிட்கோ மூலமாகவும் வழங்கப்பட்டு வந்தன. சில மாதங்களாக சிட்கோ மூலமாக வழங்கப்பட்டு வந்த மெழுகை நிறுத்தி விட்டது.
எனவே சி.பி.சி.எல் மூலமாக குறைந்தபட்சம் 7 டன் என்று இருப்பதை 3 டன் வரை வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.







