அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலகபுகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை காண வெளிநாட்டினரும் வருகிறார்கள். அந்த அளவுக்கு பெருமை வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இறக்கி விடப்படும். காளைகளை அடக்க இளைஞர் பட்டாளம் அணிவகுத்து நிற்கும். காளைகளை அடக்குவோருக்கு,. யாரிடமும் பிடிபடாமல் இருக்கும் காளைகளுக்கும் பரிசுகள் அள்ளிகொடுக்கப்படும். அதிகபட்சமாக கார்கள் பரிசளிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக மக்கள் திரண்டு வருகிறார்கள் எனபதால் தமிழக அரசு பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்துள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் (ஜல்லிக்கட்டு) அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது
அலங்காநல்லூர் கீழக்கரையில் ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதிகளுடன் மூன்றடுக்கு பார்வையாளர் மாடம், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் எழுச்சி வடிவங்களை புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வேளிகளுடன் கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுர அடி பரப்பளவு கொண்ட மிக பிரமானடமான கட்டிடமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்றது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அமையப்பெற்றுள்ள கருணாநிதி மார்பளவு சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வெற்றி பெற்றவர்களுக்கு அவர் தங்க மோதிரம் பரிசளித்தார். ஜல்லிகட்டு அரங்கில் பார்வையாளர்கள் நிறைந்து இருந்தனர்.




இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கம், தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துரையின் வழக்கமான போட்டிகளை நடத்துவதற்கும் பயன்படும்,.
இந்த அரங்கம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவிற்கு பயன்படுவதுடன் , ஜல்லிக்கட்ட்டு நடைபெறாத காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டு போட்டிகளையும் நடத்துவதற்கு உதவும்.







