டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் மற்றும் வீராங்கனைகளின் வரலாற்றை உலகறிய செய்யும் விதமாக, கடந்த 2021ம் ஆண்டு முதல் ‘வீா்கதா’ என்ற திட்டத்தின் பெயரில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான கதை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், கவிதை பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து தூத்துக்குடி பி.எம்.சி. பள்ளியை சோ்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனா பங்கேற்றாா். இப்போட்டியில், இவா், சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதி முதலிடம் பெற்றாா்.
இதுபோன்று, நாடு முழுவதும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 100 மாணவா்- மாணவிகளுக்கும் டெல்லியில் வரும் 25ம் தேதி ரூ.10 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது. மேலும், வரும் 26ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை பாா்வையிடவும், மாணவி டிவைனா மற்றும் அவரது பெற்றோருக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே செய்கிறது. இதைத்தொடா்ந்து, மாணவியை பள்ளி நிா்வாகி ஜோசப் கென்னடி, பள்ளி முதல்வா் பால்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.







